அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்காளம்பிகை எனப் போற்றப்படுகிறாள். மேலும் விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது. நவகிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி, பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும்...